Wednesday 9 January 2013

சின்னவிசயம்... நல்ல விசயம்


   தாத்தா ஊருக்குப் புறப்பட்டார். அருண் அவரை வழியனுப்ப இரயில்நிலையம் சென்றிருந்தான்;. ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அவன். இரயில் நிலையத்தில் சனசமுத்திரம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி  இருக்கை பார்த்து அமர்ந்தார் தாத்தா. வண்டி கிளம்ப இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அருண் சன்னலை பிடித்தபடி தாத்தாவோடு பேச முற்பட்டான்.
 “அருண் இங்க நிக்காத!கோட்டுக்கு அந்தப்பக்கம் போயி நில்லு!” –என்றார் தாத்தா. அவர் சொன்ன பின்புதான் அருண் கவனித்தான். தண்டவாளத்திற்கு இணையாக ஓரிரு அடிகள் தள்ளி பிளாட்பார்மில் ஒருமஞ்சள் கோடு இருந்தது. அருணின் அம்மாவும் அப்பாவும் கோட்டிற்கு அந்தப்பக்கம் தள்ளி நின்று இருந்தார்கள்.
“வண்டி கிளம்புற வரைக்கும் நான் இங்கநின்னு உங்ககூட பேசிக்கிட்டுருக்கேனே தாத்தா!” – அருண் கெஞ்சினான்.
“சொன்னா சொன்னதைக் கேக்கனும்! நல்லபிள்ளைஇல்லையா நீ!” – தாத்தா சற்று குரலை உயர்த்த வேறுவழியின்றி அருண் அம்மாஅப்பாவோடு போய்நின்று கொண்டான்;. தாத்தா இங்கே மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் நேரம்போனதேத் தெரியவில்லை. அத்தனை சுவராசியம்.  இப்போது ஊருக்குப்போனால் இனி அடுத்த விடுமுறைக்குத்தான் வருவார்.  அவரோடு ஆசைஆசையாய் இவன் பேச நினைக்க அவரோ இப்படிக் கடிந்து கொள்கிறாரே? –அருணுக்கு ஏமாற்றமாய் இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தாத்தாவைப் பார்த்து அவ்வபோது சிரிப்பதும் கையாட்டுவதுமாய் இருந்தான்.
                  இரயில் புறப்பட்டு போனபின்னால் இவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள்.  அருணின் முகம் வாட்டமாய் இருப்பதைப் பார்த்து அம்மா கேட்டார்.  அருண் தாத்தா தன்னை கடிந்து கொண்டதைச்சொன்னான்.
“தாத்தா மூனுநாள் இங்க இருந்தப்பம் பேசாததையா வண்டிகிளம்புற கடைசி மூனு நிமிடத்துல பேசிறப்போற! தாத்தா காரணம் இல்லாம எதையும் சொல்ல மாட்டாங்க!” –என்றார் அம்மா.
 “கண்டிப்பா!”- என்று அம்மாவின் வார்த்தைகளை ஆமோதித்தபடி படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தார் அப்பா.  அவர் ஆடை மாற்றியிருந்தார்.  அருணை அழைத்து சோபாவில் தனது அருகே அமர்த்திக்கொண்டு சொன்னார்;.
 “பிளாட்பார்ம்ல டிரெயின் வந்து நிக்கும்போதும் போகும்போதும் நகர்ற பெட்டிகளை பக்கத்துல இருந்து பாத்தா தலை சுத்தும்!  தலைசுத்தி தண்டவாளத்துல  விழுந்துட்டா உயிருக்கு ஆபத்து இல்லையா? பாதுகாப்புதான முக்கியம்? அதுக்காகத்;தான் அந்த எச்சரிக்கைக் கோடு! அதைத் தாண்டித்தான் நிக்கனும்!” –என்றார் அப்பா. அவரே தொடர்ந்து சொன்னார்.
 “இரயில் கிளம்புறதுக்கு முன்னாடி இரயில் ஊழியர்கள்லாம் கடைசிநிமிட ஆயுத்தபணிகளை செஞ்சிக்கிட்டிருப்பாங்க! நாம நிக்குறது அவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக்கூடாதுல்லயா?” – என்றவர் சற்று இடைவெளி விட்டு  “இதுல ஒரு பொதுநல நோக்கும் இருக்கு!’- என்றார்.
 “என்னப்பா அது?”- அருண் ஆர்வமாகக் கேட்டான்.
 “நிறைய பயணிகள் வௌ;வேற இடங்கள்ல்ல இருந்து வண்டிக்கு வர்றாங்க! நியாயமான காரணங்களால பலபேருக்கு கடைசி நிம்டத்துலதான் வண்டியப் பிடிக்கமுடியுது!வழியனுப்ப வர்றவங்கள்ல்லாம் ப்ளாட்பார்மை ஆக்கிரமிச்சு நின்னுகிட்டா அவங்களால எப்படி கோச் பாத்து ஏற முடியும்?குழந்தை குட்டிகளோட வர்றவங்க லக்கேசோட வர்றவங்க நிலமையெல்லாம் ரொம்பத் திண்டாட்டமா போயிருமல்”!- என்றார் அப்பா.
                   இப்போது அருணுக்கு ஒரு சந்தேகம் வந்தது.  “நாம மட்டுந்தான் கோட்டுக்கு இந்தப்பக்கம் நின்னோம்! ஆனா மத்தவங்க யாரும் அப்படி நிக்கலையே? எல்லாரும் அவங்கஅவங்க வசதிக்குத்தான நின்னாங்க!”- கேட்டான் அவன்.
 “எல்லாரும் சேர்ந்து ஒரு தப்பை செய்யுறதுனால தப்பு சரியாயிராது! அதை நாம செய்யவும் கூடாது! நாம சௌகர்யமா வந்து சேர்ந்துட்டோம்! அதே மாதிரி மத்தவங்களுக்கும் ட்ரெயினை பிடிக்குற சிரமம் இருக்குங்கறதை உணர்ந்து செயல்படனும்! இது தனி மனுசங்க அவங்களா நினைச்சுப்பாத்துத் திருந்த வேண்டிய விசயம்!” –என்றார் அப்பா. அவர் வரவேற்பறையை விட்டு எழுந்து வெளியே சென்று விட்டார்.   அருண் தாத்தாவை எண்ணிப்பார்த்தான். பாதுகாப்பு மற்றவர்கள் சௌகர்யம் என்ற பல நல்ல விசயங்களை மனத்தில வைத்துக்கொண்டுதான் இவனைத் தள்ளி நிற்கச்சொல்லியிருக்கிறார் அவர்.  அருணுக்கு இப்போது நன்றாகப் புரிந்தது.  என்ன இருந்தாலும் அவன் சிறுவன்தானே?  ஊருக்குப் போய் சேர்ந்து விட்டசெய்தியைத் தாத்தா தொலைபேசியில் சொன்னார்.  தான் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டான் அருண். தாத்தா சிரித்தபடி  “நல்லா படி!”- என்று இவனை ஆசிர்வதித்தார்.
மா.பிரபாகரன்  

No comments:

Post a Comment