Tuesday 15 January 2013

தமிழ் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்கு காரணமென்ன?


தமிழில் குழந்தை இலக்கியம் பற்றி விவாதிக்க ஒரு தளமாக "குழந்தை எழுத்தாளர் பிளாக் ஸ்பாட் " தொடங்கப்பட்டது.
அதில் எழுதப்பட்ட "தமிழில் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை" என்ற கட்டுரை எழுத்தாளர், பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் எதிர்வினையைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
நேற்று நிறைய பேர் எழுதினார்கள். படைப்புகளும் அதிகம் வந்தன. இன்று ஒன்றுமில்லை என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்கு காரணமென்ன என்பதை ஆராய வேண்டும் என்று எழுத்தாளர் புதிய ஜீவா ஒரு கருத்தை முன் வைத்தார்.
மூத்த எழுத்தாளர் பொன்னீலனின் எதிர்வினை நெகிழ்ச்சியோடு இருந்தது. 'கட்டுரை மூலம் ஒரு முக்கியப் பிரச்சினை கிளப்பபட்டிருக்கிறது. நான் கூட குழந்தைகளுக்காக எதுவும் எழுதவில்லை என்பதை குற்ற உணர்ச்சியாக உணருகிறேன். இனிமேல் எழுதுவேன்' என்றார்.
சென்னையில் சென்ற வாரம் "குழந்தைகளைக் கொண்டாடுவோம்" அமைப்பினர் குழந்தைகளுக்கு கதை எழுதுவதற்கு இருபது ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி முகாம் நடத்தினர். அதிலும் இக்கட்டுரை விவாதிக்கப்பட்டது.
"மழலைச் சொல் பதிப்பகம்" மலர்விழி சமூகம் மாறியிருக்கிறது. மாற்றத்தின் தேவைக்கேற்ப படைப்புகள் வராமல் பின் தங்கியிருப்பதும் தமிழில் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்கு காரணம் என்று கூறினார்.
எனக்கு மலர்விழியின் கருத்தை ஒப்புக்கொள்ள தோன்றியது. தமிழில் குழந்தை இலக்கியம் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் குழந்தை  எழுத்தாளர்கள்தான். காலத்திற்கேற்ப படைப்புகளை அவர்கள் தரவில்லை. செக்கு மாட்டைப்போல் குழந்தை இலக்கியம் பழகிய தடத்திலே சுற்றி சுற்றி வருகிறது. அதிலிருந்து மீளும் முயற்சி இந்த நிமிடம் வரை இல்லை.
குழந்தைப் பாடல்களை எடுத்துக் கொள்ளுங்கள் : சுமார் 100 வருடங்களாக 'பாப்பா, பாப்பா, பள்ளிக்கூடத்திற்கு ஓடி வா' என்று அழைக்கும் பாடல்களும், ஆடு, மாடு, கோழி, கிளி, பட்டம், வானவில், நிலா, மழை பற்றிய பாடல்களும் குவியல் குவியல்களாக எழுதப்பட்டு வருகின்றன. குழந்தைக் கவிஞர்கள் அனைவரும் விடாமல் இவைகளைப் பற்றியே எழுதி குழந்தைப்பாடல்களுக்கு ஒரு "பார்முலா" வை உருவாக்கி விட்டார்கள். இந்த வாய்ப்பாட்டை பின்பற்றி ஒரு தமிழாசிரியர் சிரமமில்லாமல் "குழந்தைக் கவிஞர்"  என்ற பட்டத்தை பெற்று விடலாம். தன்னுடைய அனுபவத்தையோ, குழந்தைகளின் உலகத்தையே வெளிப்படுத்தாத இந்த வாய்ப்பாட்டு பாடல்களை எந்த குழந்தைகள் விரும்பக்கூடும் ? வார்த்தை சேர்க்கைகள் குழந்தைப் பாடல்களாகி விட முடியுமா ? குழந்தைப் பாடல்கள் தாளலயத்தோடு இருக்க வேண்டாமா ? உணர்ச்சித் துள்ளல் வேண்டாமா ? குழந்தைக்கு தெரிந்த பொருள்களையெல்லாம் பட்டியலிட்டு அதைத் தலைப்பாக்கி விளக்கி விளக்கி எழுதி 'பாப்பா விரும்பும் பாடல்கள் ' 'சிறுவர்களுக்கு சின்ன சின்ன பாடல்கள்' என்று நூலாக்கி சந்தைக்கு கொண்டு வருவதால் தமிழ்க் குழந்தைகள் தலை தெறிக்க ஒடுகிறார்கள். குழந்தைப் பாடல்கள் என்றால் மதிப்பு மரியாதை இல்லாமல் போய் விட்டது.
தெரிந்தோ, தெரியாமலோ 'சந்தை' என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். உண்மை அதுதான், குழந்தை இலக்கிய நூல்களுக்கு ஒரு சந்தை இருக்கிறது. அரசு நூலகம், பள்ளி நூலகம் என்ற அந்த சந்தையை குறி வைத்து குறுகிய காலத்தில் தயாரிக்கப்படும் வணிக பண்டமாக மலிவடைந்து விட்டதும் குழந்தை இலக்கியம் பின்தங்கிப் போனதற்கு ஒரு காரணமே !
பெரும்பாலும் குழந்தை எழுத்தாளர்கள் பள்ளி ஆசிரியர்கள்தான்.  அவர்களின் தேடல் எல்லை தெரிந்ததே.  காந்தி தாத்தா, நேரு மாமா என்று தேசத் தலைவர்களைப் பற்றி பள்ளி நிகழ்ச்சிகளுக்கு எழுதியவைகளை நூலாக்குகிறார்கள். அல்லது கோடை விடுமுறையில் பதிப்பகத் தேவைகளுக்காக எழுதுகிறார்கள். குழந்தைப் பாடல்களில் பாப்பா பாட்டு தான் நூறு வருடங்களைக் கடந்தும் நிற்கிறது. அது பாரதி பதிப்பகத் தேவைக்காக எழுதியதில்லை. பாப்பா சகுந்தலாவிற்காக எழுதியது. குழந்தை எழுத்தாளர்கள் தங்கள் குழந்தைகளுக்காக எழுதியிருந்தால் கூட அவை மனங்கொள்ளத்தக்கவைகளாக இருந்திருக்கும்.
ஆங்கிலத்தில் குழந்தை இலக்கியத்தின் செழிப்பை பார்த்து நமக்கு பொறாமை வர வேண்டும். இந்த விஷயத்தில் பொறாமை நல்ல குணமே ! ஆங்கிலத்தில் குழந்தை இலக்கியத்தின் பல பிரிவுகளைப் பார்க்கும் போது பயன்பாடுகளை நோக்கும் போது நீதி இலக்கியம் மட்டும் தான் குழந்தை இலக்கியம் என்பதை நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம். திருக்குறள், அகநானூறு, புறநானூறு, நாலடியார், கொன்றைவேந்தன், ஆத்திசூடி, நல்வழி ஆகிய நீதி நூல்களுக்கு எளிய உரையும், கதைகளும் வலிந்து எழுதி குழந்தை இலக்கியம் என்கிறோம். குழந்தையின் அனுபவங்களையும் உலகத்தையும் முன் நிறுத்துவது தான் குழந்தை இலக்கியத்தின் இலட்சணம் என்று உலக குழந்தை இலக்கிய வரையறை கூறுகிறது. இதற்கு நேர்மாறாக தமிழில் குழந்தை இலக்கிய செயல்பாடுகள் இருக்கின்றன. குட்டிகளுக்கு குறள் நெறிக் கதைகள், சிறுவர்களுக்கு ஆத்திசூடி ஒழுக்கக் கதைகள் என்று குழந்தைகளின் உளவியலை கருத்தில் கொள்ளாத உபதேசக் கதைகள் தமிழில் குழந்தை இலக்கியம் என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பழிக்குப்பழி உணர்வு, பணிவு, கீழ்ப்படிதல், வணங்குதல், ஈகை, துறவு, அடக்கம் போற்றும் குணம், தொண்டுள்ளம் ஆகிய நெறிகளெல்லாம் சமூக மாற்றத்திற்கேற்ப பரிசீலனைக்குரியவை. அச்சமின்மை, நேர்மை, பகுத்தறிவு, ஆய்வு மனப்பான்மை, சகிப்புத்தன்மை, பகிர்ந்து கொள்ளல், இரக்கம், ஜனநாயகம், சமத்துவ உணர்வு போன்ற புதிய நெறிகள் காலமாற்றத்திற்கேற்ப வழி மொழியப்படுபவை.
இவ்வாறு புதிய சிந்தனைகள் உள்ளடக்கமாக வேண்டும். அதை அற்புத ஆற்றலுடன் படைப்பாக்க  வேண்டும். இது குழந்தை இலக்கியத்திற்கு சிறப்பான நிபந்தனை. அதனால் தான் குழந்தைகளுக்கு எழுதுவது கடினம் என்றார்கள். நடையை மாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு தாய் சாதாரணமாக நடக்கும் போது வேகமாக நடப்பாள். கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு நடக்கும்போது மெதுவாகத் தான் நடப்பாள். குழந்தை எழுத்தாளர் தாயைப்போல் நடையை மாற்ற வேண்டும். ஒரு வாக்கியம் ஒரு பத்திபோல் எழுதப்பட்டுள்ள குழந்தை நூலை நான் பார்த்திருக்கிறேன். அறிவுரை மட்டும் கூறுகின்ற 'பெரிய அண்ணன்' மனோபாவம் கொண்ட வழிகாட்டும் நூல்கள் சிறுவர் இலக்கியமாகி விட்டது. தமிழில் இது போன்ற நூல்கள் அதிகம்.
சரி, இப்படி குழந்தை இலக்கியத்தின் உள்ளடக்கம், உருவம் பற்றியெல்லாம், விமர்சனம், விவாதம் தமிழில் பெருமளவு நடைபெற்றதா ?
குழந்தை இலக்கியத்தை மதித்து அதை வளர்த்தெடுக்க முயற்சிகளும், பயிற்சிகளும் தமிழில் நடைபெறவில்லையே ! மேலை நாடுகளில் ஏன், இந்தியாவிலேயே பிற மாநிலங்களில் குழந்தை இலக்கியத்தின் போக்குகள், வளர்ச்சிகள் பற்றி குழந்தை எழுத்தாளர்களுக்குத் தெரியுமா ? இப்படி எத்தனையோ 'அறியாமைகள்' நமக்குள் இருந்து தமிழில் குழந்தை இலக்கியத்தை ஆமை வேகத்திற்கு தள்ளி விட்டது.
ஆமையை பற்றி குறிப்பிட்டவுடன் முயல் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்போது குழந்தைகளை நாம் ஓடும் முயல்களாக்கி விட்டோம். வாழ்க்கை பந்தய மைதானமாகி விட்டதால் குழந்தைகளை போட்டிகளுக்கு தயார்படுத்த வேண்டியிருக்கிறது. குழந்தைகள் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தால் கல்வி, வேலை வாய்ப்பு போட்டிகளில் பங்கேற்க நேரம் கிடைக்குமா ? அதுமட்டுமில்லாமல் போட்டி உலகில் கதை புத்தகம் படிப்பதற்கான இடமென்ன ? இது குறித்து பெற்றோரும், ஆசிரியரும் கொண்டுள்ள பார்வைகள் தமிழில் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சியைப் பாதித்துள்ளன.
தம் குழந்தைகள் டாக்டராக வேண்டும், பொறியாளராக வேண்டும், அதிகாரிகளாக வேண்டும் என்று தான் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். யாரும் நல்ல மனிதராக வேண்டும் என்று நினைப்பதில்லை. பெற்றோரின் நோக்கத்திற்கு ஏற்ப பிள்ளைகள் கல்வியை சுமக்க வேண்டியிருக்கிறது. கல்வியின் நோக்கம் வேலைவாய்ப்பு கனியை பறிக்க என்றாகி விட்டதால் குழந்தைகள் "கோல்" கை கொண்டு வாழ்கிறார்கள். அந்த "கோல்" என்பது மதிப்பெண், அதிக மதிப்பெண் பெறும் போட்டியில் கதைப் புத்தகத்திற்கு இடமேது ? மதிப்பெண் மந்திரக் கோல்களை பிள்ளைகளுக்கு வாங்கித் தர பெற்றோர் முடிவு செய்து விட்டதால் கல்வி வியாபாரமானது. வியாபார உத்திகளைக் கொண்ட இன்றைய கல்வி முறையில் இலக்கியக் கல்விக்கு இடமில்லாமல் போய் விட்டது. மேலும் கொடுமை என்னவென்றால் பள்ளி, கல்லூரி படிப்புகளில் தாய்மொழியின் இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு ஆங்கிலம் கோலோச்சுகிறது. தமிழில் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்கு இது முக்கிய காரணமென்று நான் நினைக்கின்றேன்.
குழந்தையின் உணர்ச்சிகளுக்கு உணவாக இருக்க வேண்டிய தாய்மொழியும், இலக்கியமும் இல்லை என்றாகி விட்ட பிறகு "மேகி நூடுல்ஸ்" போல் தொலைக்காட்சி கார்ட்டூன் சேனல்களும் டி.வி.டி களும் இணையமும் தீனிகளாகி விட்டன. நொறுக்குத்தீனிகள் ஜீரணக் கோளாறுகளுக்கு வழி வகுப்பது போல் குழந்தைகளின் உளச் சிக்கல்களுக்கு இவைகளும் உதவுகின்றன.
கிரிக்கெட் சேனல் விளையாட்டாகி அது நம்மை பார்வையாளராக்கி நாம் விளையாடி மகிழ்வதை பின்னுக்கு தள்ளி விட்டது போல் கார்ட்டூன் சேனல்கள் குழந்தைகள் படித்து மகிழ்வதையும் கதை கேட்டு மகிழ்வதையும் இல்லாமல் செய்து விட்டது. குழந்தைகளுக்கு நாம் கதை சொல்லும் போது கதை சொல்ல சிந்திக்கிறோம். கேட்கும் குழந்தையும் யோசிக்கிறது, கேள்வி கேட்கிறது. நவீன ஊடகங்கள் இந்த ஊடாடல் இல்லாமல் செய்து விட்டது. இதனால் நேர்ந்து விட்ட கற்பனை வறட்சி தமிழில் குழந்தை இலக்கியத்தை பாதித்துள்ளது.
உலகமயம் நுகர்வு கலாச்சாரத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளது. அது மொழி, கல்வி, குடும்பம், சமூகம் என்று எல்லா அமைப்புகளையும் பாதித்துள்ளது. உலகமயம் தன் நோக்கத்திற்கேற்ப எல்லாவற்றையும் புரட்டி போடுகிறது. இதனால் மனித வாழ்க்கையின் பன்முகத் தன்மைகள் நெருக்கடிக்குள்ளாகின்றன. "சூப்பர்மேன்" "ஸ்பைடர் மேன்" தமிழ்க் குழந் தைகளின் கதாநாயகர்களாகி விட முடியாது. நம் மண்ணுக்குரிய தலைமகனை குழந்தைகளுக்கு ஆதர்ச பாத்திரமாக்கிக் காட்ட தவறி விட்டோம். வாழ்க்கைப் பற்றிய சரியான மதிப்பீடுகளை குழந்தைகளுக்கு உருவாக்கும் இலக்கியத்தைப் படைக்கத் தவறி விட்டோம்.
அந்தகார இருட்டில் வானில் மின்னும் நட்சத்திரங்களைப்போல் சோவியத்தில் உருவான குழந்தை இலக்கியத்தின் தமிழ் மொழிபெயர்ப்புகள் இருந்த காலத்தை மறந்து விட முடியாது. ஆனால் அந்த மொழி பெயர்ப்புகள் குழந்தையின் பற்களுக்கு பதமானவை அல்ல. அறிவியல், எதார்த்தம் சார்ந்த குழந்தை இலக்கியத்தின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு தமிழில் குழந்தை இலக்கியம் பிறப்பெடுத்திருக்க வேண்டும். அது முழுமையாக நடைபெறாமல் போனதும் தமிழ் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்கு காரணமென்பேன். தமிழில் துளிர், அரும்பு போன்ற இதழ்களின் முயற்சிகளை நாம் அறிவோம். அவை தமிழில் குழந்தை இலக்கியத்தின் திசை வழியை நிர்ணயிக்கும் பேராற்றலுடன் இல்லை.
தமிழில் குழந்தை இலக்கியத்தை பலவீனப்படுத்தும் காரணிகளில் முக்கியமானது நமது கல்வி முறையின் தோல்வி. அது குழந்தைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை பள்ளிக்கு வெளியே நிறுத்தியிருக்கிறது. இந்தியாவில் 12 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். குழந்தையின் உரிமைகள் காக்கப்படாத நிலையில் குழந்தை இலக்கியம் யாருக்காக? நம்மை பலவீனப்படுத்தும் காரணிகளை முதலில் அறிவோம், அகற்றுவோம்! ஆக, சமூக அக்கறையுடன் கூடிய முயற்சிகளே தமிழில் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சியை மாற்றும் மருந்து என்று நான் நினைக்கிறேன். இன்னும் தொடர்ந்து விவாதிப்போம்!
                                                                                                                             - சுகுமாரன்

1 comment:

  1. Reasons for the setbacks in the area of children's writings were analysed in your article thoughtfully. Let us hope positive changes in future among the writers and their writings.
    -Prabakaran.Writer.

    ReplyDelete