Tuesday 15 January 2013

பூக்கள் வெம்புகின்றன...


பாரத தேவி ‘நிலாக்கள் தூர தூரமாய்’ என்ற படைப்பின் மூலம் இலக்கியத்தின் சிகரத்தைத் தொட்டவர். குழந்தை எழுத்தாளர் வலைப்பூவிற்காக அவர் எழுதிய குழந்தை இலக்கியம் இது. 



தத்தி, தத்தி சிறுநடை போடும் குட்டிப்பாப்பாவை பார்க்க, பார்க்க ராமுவின் மனசு குதியாளம் போட்டது. இனி பாப்பா நடந்து கொள்வாள். இனிமேல் அவளை தூக்கி வைத்திருக்கும் வேலை அவ்வளவாக இருக்காது. பாப்பாவிற்கு மூத்தவனான சரணையும் அவன்தான் தூக்கி வைத்திருந்தான். அம்மா காட்டுக்கு வேலைக்குப் போகும்போது இவனும் கூடவே போவான்.
அம்மா தம்பியை இடுப்பில் வைத்துக்கொண்டு தொட்டில் சீலையையும் எடுத்துக் கொண்டு ‘வேகு வேகு’ என்று நடப்பாள். இவன் கஞ்சி சட்டியை தூக்கிக் கொண்டு அம்மா பின்னால் ஓட்டமும், நடையுமாய் ஓடுவான். பிஞ்சைக்கு வந்ததும் கஞ்சிச்சட்டியை கீழே வைப்பான். இவனிடம் பிள்ளையை கொடுக்கும் அம்மா தாழ்ந்த கிளைப் பார்த்து தொட்டில் கட்டுவாள். பிறகு வரப்பில் உட்கார்ந்து பிள்ளைக்கு பால் கொடுப்பாள். இதற்குள் நிறைய ஆட்கள் வந்து நடுவைக்காகவோ, களைக்காகவோ வயலுக்குள் இறங்கி விடுவார்கள்.
அம்மாவும், பால் குடிக்கும் தம்பியை தூக்கி இவனிடம் கொடுப்பாள். கொஞ்ச நேரம் தம்பி கூட விளையாடு. அழுதான்னா தொட்டில் போட்டு ஆட்டு உறங்கிருவான். உறங்கி முழிச்சி அழுதான்னா என் கிட்ட தூக்கிட்டுவா. பாத்து பதனமா தூக்கிட்டு வா, அவசரப்பட்டு வாய்க்கா, வரப்புல போட்டுராத. ரொம்பவும் அழுவ வச்சிராத, பெறவு தொண்ட கட்டிப் போவும். உனக்கு பசிச்சா தூக்குப் போணியில கூழும், துணி முடிச்சில வெங்காயமும் கத்தரிக்கா வத்தலும் இருக்கு. மூடியில கொஞ்சமா வச்சி கரைச்சி குடி என்று சொல்லிவிட்டு போவாள்.  அம்மா போன பிறகு இவன் தம்பியை தூக்கி வைத்துக்கொண்டு அங்கே பறந்து கொண்டிருக்கும்  கொக்குகளையும், குருவிகளையும் காண்பித்து விளையாட்டு காண்பிப்பான். பிறகு தொட்டிலில் போட்டு ஆட்டி உறங்க வைத்தபின் மண்ணில் சிறுகுழி தோண்டி கோலி விளையாட ஆரம்பிப்பான். ஒரு கோலி கண்டெடுத்தது. இன்னொன்று பிரதீப் கொடுத்தது.
பிரதீப் ரொம்ப நல்லவன். அஞ்சாம் வகுப்பு படிக்கிறான். ராமுவிற்கும் அவனோடு படிக்கப் போக வேண்டுமென்று ரொம்ப ஆசை. ஒருநாள் தன் அப்பாவிடம் படிக்க ஆசயா இருக்குப்பா என்றான்.
நீ படிக்க போய்ட்டா தம்பிய யாரு வச்சிருப்பா? என்றார் கோபமாக.
பிரதீப், பாலு எல்லாம் படிக்கிறாங்க. நானும் அவங்க கூட படிக்க போறேம்பா என்றான். அவன் குரல் அப்பாவிடம் இறைஞ்சியது.
சும்மா சொன்னதையே சொல்லிக்கிட்டு இருந்தா விளார எடுத்தேன் என்று அவன் அப்பா சொல்லவும் அவன் அடங்கிப் போனான். அந்த வயசுக்கே அவன் உடம்பை அந்த விளாரு நிறைய தடவை ருசி பார்த்திருக்கிறது. அதனால் அவன் மெளனமாகிவிட்டான்.
தம்பியை வயலுக்கு தூக்கிக் கொண்டு அலைந்தான். அவன் நடை பழகும்போதே குட்டி பாப்பா பிறந்து விட்டாள். பிறகு பாப்பாவை தூக்கிக் கொண்டு அம்மாவின் பின்னால் பிஞ்சைக்கு நடந்தான். இப்போது அவளும் நடை பழக ஆரம்பித்து விட்டாள். இனி அவளை பிஞ்சைக்கு தூக்கிக் கொண்டு போக வேண்டாம். அதுவுமில்லாமல் இவனின் தம்பியே அவளைப் பார்த்துக் கொள்கிறான். சோறு ஊட்டுகிறான். இனி தனக்கு தங்கச்சிப் பாப்பாவை பற்றிய கவலை இல்லை. இனி தான் பள்ளிக்கூடம் போகலாம். தன் சேத்திக்காரர்கள் கூட விளையாடலாம் என்று எண்ணியவனுக்கு உற்சாகம் பொங்கியது.
வாயால் புர்...புர்ரென்று ஓசையிட்டுக்கொண்டு கையால் வண்டியை ஓட்டுவதுபோல் சைகை செய்து கொண்டு பிரதீப்பிடம் ஓடினான். தான் பள்ளிக்கூடம் வரும் வி­யத்தை சொன்னபோது பிரதீப் தானே பாடங்களை அவனுக்கு  சொல்லித் தருவதாக சொன்னவன் ராமு விளையாடுவதற்காக ஒரு பம்பரம், ஒரு சில்லாங்குச்சியும், நிறைய கலர் கொண்ட கோலியையும் கொடுத்தான்.
மறுநாள் அவன் அப்பா இவனுக்காக புது சட்டையும் புது டவுசரும் எடுத்து வந்தார். ஏற்கனவே இவனுக்கு கிழிகிற நிலையில் இரண்டு டிரெஸ் இருந்தது. அவன் அம்மா என்றைக்குமில்லாமல் இவனுக்கு தலையில் எண்ணை வைத்து உச்சி ஒதுக்கி சீவி விட்டாள். அதோடு அவனை குளிப்பாட்டி, புதுச்சட்டை, டவுசரையும் போட்டு விட்டாள்.
அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. அம்மா எதற்காக தனக்கு இப்படியயல்லாம் செய்கிறாள். அப்பா குட்டி பாப்பாவை தூக்கி வைத்துக் கொண்டு இத்தனையையும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாரே ஒருவேளை பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடப்போகிறார்களோ? நானே பிரதீப்போடு போய் விடுவேனே‡ ஆனால் முதன் முதலாக பள்ளிக்கூடத்தில் சேர்க்க அப்பா வர வேண்டுமாமே. ராமுவின் முட்டை கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து விரிந்து சுருங்கின. ரொம்ப நேரம் சீவி சிணுக்கிக்கிட்டு இருக்காம சீக்கிரம் புறப்படு என்று அப்பா ஒரு அதட்டுப் போட அம்மா அவசரமாய் இவனையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டாள். பஸ்ஸில் ஏறியபோது அவனுக்கு சந்தோசமாயிருந்தது. ஆனால் உட்கார முடியாமல் கூட்டம் நிறைய இருக்க இவன் சன்னல் ஓரமாக போய் நின்று கொண்டான். விருட், விருட்டென்று ஓடிய மரங்களையும் தந்திக்கம்பங்களையும் இவன் ஆசசரியமாய் பார்த்துக் கொண்டே வந்தான். இப்போது பஸ் முழுக்க காலியாகிவிட்டது. நாம் செலாத்தலாக உட்காரலாம் என்று அவன் நினைக்குமுன்பே அப்பாஅவனை இறங்க சொன்னார். அப்பா முன்னால் நடக்க, அம்மா அவர் பின்னால் நடக்க இவன் அவர்களுடனே சிறு ஓட்டமாய் ஓடினான். எல்லோரும் ஒரு தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். அங்கே நிறைய ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். முரடனாக இருந்த ஒருவன் இவன் அருகில் வந்து இவனை மேலும், கீழும் பார்த்தவாறே ரொம்ப பொடியனா இருக்கானே இவன் என்ன வேலை செய்வான் என்றான்.
அப்பா சொன்னார். அவனுக்கு எலும்பு தாக்கு நிறைய இருக்கு. வீட்டில எல்லாம் இவன்தான் எல்லா வேலையும் செய்வான் என்றவர் இவனிடம் இவர்கள் சொன்ன வேலையை நல்லபடியா செய்யணும். இல்லாட்டா கொன்னே போடுவேன் என்றார். அவனுக்கு பச்சை விளார் ஞாபகம் வந்தது. அவன் அம்மா உனக்கு பத்து வயசுக்குமேல ஆயிருச்சி. இவங்க சொல்ற வேல செய்யி. கொஞ்ச நாள் கழிச்சி அம்மா உனக்கு கடலை மிட்டாய் வாங்கிட்டு உன்னைப் பார்க்க வாரேன் என்றாள். அவள் கண்கள் கலங்கின. கூடவே, அவன் கண்ணும் கலங்கியது. வீட்டில் வைத்திருந்த பம்பரமும் கோலியும் அவன் ஞாபகத்துக்கு வந்தன.
‡                                                                                                             பாரத தேவி

1 comment:

  1. Miseries of the underprivileged kids were brought to fore in pookal vembukindrana story.
    -prabakaran,writer.

    ReplyDelete