Wednesday 16 January 2013

மனம் மாறிய மாறன்

குறிஞ்சிச் செல்வர் கொ.மா. கோதண்டம் எழுதியவை 102 நூல்கள். 40 நூல்கள் சிறுவர் இலக்கியம்.இவரது சாதனைப் பட்டியல் பெரிது. சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்றிருப்பது அவரது சமீபத்திய சாதனை. கானகக் கதைகளை குழந்தைகளுக்காக இவரைப்போல் யாரும் எழுதவில்லை. மலை வாழ் சிறுவனான நீலன் இவர் படைத்த புகழ்பெற்ற பாத்திரம். குழந்தை எழுத்தாளர் வலைப்பூவிற்காக நீலன் இடம் பெறும் சிறுகதை.


மாறன் ஒரு முரடன். வீட்டிலும் பள்ளியிலும் யார் சொல்லையும் கேட்கமாட்டான். தான் சொல்லுவதே சரி என்று வாதிப்பான். எதிர்த்துப் பேசும் மாணவர்களை அடித்தும் விடுவான். அதனால் யாரும் அவனுடன் சேரமாட்டார்கள்.

மாறன் தோப்புக்குள் வந்து சைக்கிளை நிறுத்திவிட்டு சுற்றிப் பார்த்தான். இரவில் இலேசாக மழை பெய்திருந்த தோப்பில் உழவுசால் கரைகளில் ஆங்காங்கே சிவப்பு வெல்வெட்டுத் துணியை வட்ட வட்டமாக வெட்டிப் போட்டது போல் தாம்பூலப்பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தன. பட்டுப்போன்ற அதன் உடல் ஏதோ ஒரு சிறு சிறு காட்டுப்பழங்கள் விழுந்து கிடந்த மாதிரி இருந்தது. மாறன் அவற்றை மிதித்துக் கொண்டு சென்றான்.
மலையின் வடமேற்குத் திசையில் கழுகுப் பாறையும் அதன் கீழே அலிபாபா குகை போன்று ஒரு குகை வாயிலும் கண்களுக்குத் தெரிந்தன. அங்கே எப்படியாவது ஒரு நாளைக்குப் போய் விட்டு வரவேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனாலும் பயம் வேறு மனதில் புலி, யானை ஏதேனும் எதிரில் வந்து விட்டால், என்ன செய்வது?
கிணற்றோரம் சின்னஞ் சிறிய ஒட்டுமாஞ் செடிகள் பல இருந்தன. அந்த மரங்களெல்லாம் மேகப் பொதிகளாய்ப் பூத்து அதிகமான பிஞ்சுகள் விட்டிருந்தன.
பெருமிதத்தோடு அதன் அருகில் வந்தான். அடியில் நிறையப் பிஞ்சுகள் கீழே விழுந்து கிடந்தன. ஏன் பிஞ்சுகள்    இப்படி விழுந்து கிடக்கின்றன?
காவலாளியிடம் சத்தம் போட வேண்டுமென்று நினைத்துக் கொள்கிறான். அவன் இப்படியாகாமல் செய்திருக்கலாமில்லையா! அவன் மனதிற்குள் கோபப்பட்டுக் கொண்டான். அத்தனையும் முற்றிப் பழுத்தால் பாரம் தாங்காமல் கிளைகளெல்லாம்  ஒடிந்து விடுமென்றுதான் இயற்கை தேவையில்லாத பிஞ்சுகளைக் கீழே உதிர்த்து விடுகின்றது என்ற உண்மை அவனுக்கு எங்கே தெரியப் போகிறது. பாவம்.
சுற்றிப் பார்த்து முடிந்ததும் ஓடையைப் பார்த்து நடந்தான். ஒரு தடவை குளித்துவிட்டு வரலாமே என்ற எண்ணத்தில் அங்கு வந்தான். அந்த ஓடையில் திடீரென்று தண்ணீர் வரும். அப்படியே திடீரென்று வற்றியும் போகும். அதனால் அதற்குப் பல்லி குடிச்சான் ஓடை என்று பெயரிட்டிருந்தார்கள்.
இரவில் பெய்த மழைக்கு ஓடையில் தண்ணீர் முழங்காலளவு வந்து கொண்டிருந்தது.
வேலியின் அருகில் கொடுக்காப்புள்ளி மரத்தின் கீழே ஒரு சிறுவன் தூண்டிலைத் தண்ணீரில் போட்டு மாறன் வந்ததையும் பார்க்காமல் மிதப்புக் கட்டையிலேயே கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.   அவன் ஆதிவாசிச் சிறுவன். தலையில் தலைப்பாகையாக ஒரு அழுக்குத் துண்டும் இடையில் கோவணமுமாக நின்று கொண்டிருந்தான். அருகில் ஒரு ஓலைப்பெட்டியில் சில மீன்களும் ஒரு சிறட்டையில் மீன் உணவிற்காக மண் புழுக்களும் கிடந்தன.
மாறனுக்கு அவனைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. நம்மைப் பார்க்காமல் இப்படி அலட்சிய மாக நிற்கிறானே என்று.
''டேய்'' என்று அதட்டினான்.
அவன் பயந்து போய் வந்து...''சாமி...ஈ ''பயத்தால் ஏதோ உளறினான்.
''எங்க எடத்துல ஏண்டா வந்து மீன் புடிக்கறே?''
''தெரியாம செஞ்சிட்டேஞ் சாமி'' அவன் தூண்டிலைத் தரையில் வைத்துவிட்டு பயத்தால் பேசாமல் நின்றான். அருகில் சென்ற மாறன் மீன் உள்ள ஓலைப் பெட்டியைக் காலால் எத்தி ஓடையில் தள்ளி விட்டு அவனைக் கன்னத்தில் ஒரு அறைவிட்டு அப்படியே ஓடையில் தள்ளினான்.
தடால் என்று ஓடையில் விழுந்த அந்தச் சிறுவன் மெல்ல எழுந்தான். கீழே கிடந்த கல்லில் பட்டு நெற்றியில் அடிபட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. கீழே கிடந்த தூண்டிலைப் பார்த்ததும் மாறனுக்கு நாமும் பொழுதுபோக்க சிறிதுநேரம் மீன் பிடிக்கலாமே என்ற ஆசை வந்தது. அந்தத் தூண்டிலை எடுத்து மரத்தின் கீழ் உள்ள பாறையில் அமர்ந்து தூண்டிலை வீசினான்.
மிதப்புக் கட்டை நீரில் முங்குவது போலத் தெரிந்ததும் விருட்டென்று மேலே தூக்கினான். முள்ளில் இரை கூட இல்லை. மீன்கள் எப்படியோ அதனைத் தின்று விட்டிருந்தன. அதைப் பிடித்து ஒரு புழுவை அருவருப்புடன் எடுத்து இடது கையால் முள்ளில் செருகி வீசினான். இப்படி பல தடவை ஏமாந்தவனுக்கு ஒரு நல்ல மீன் டக்கென்று இழுத்ததும் கிடைத்தது.
மீனை மெல்ல எடுத்தான். அது ஒரு கெளுத்தி மீன். அதை எங்கே வைப்பது என்று யோசித்தான். ஓடையில் மேலும் சில மீன்கள் தெரிந்தன. டக்கென்று வாயைத் திறந்து அந்த மீனை பற்களால் கடித்துக் கொண்டு மீன்கள் ஆய்ந்து கொண்டிருந்த அந்த இடத்தில் மேலும் தூண்டிலை வீசினான்.
வாயிலிருந்த மீன் துடித்ததில் அதன் வால் இவன் உதட்டில் அடித்துக் கொண்டிருந்தது. வாயில் கூச்சமாக இருக்கவே பல்லை அசைத்தான்.
டக்கென்று மீன் வாயில் துள்ளியது. கெளுத்தி மீனின் இரு பக்க முள் வாயைக் கிழித்து ரத்தமாக்கியது. அவன் ஆ...ஊ...என்றவாறே மயங்கிக் கிழே விழுந்தான்.
தூர நின்று தூண்டிலுக்காக காத்துக் கொண்டிருந்த ஆதிவாசிச் சிறுவன் ஓடி வந்தான். மாறனின் வாயைத் திறந்து மீனை வெளியே எடுத்து எறிந்து விட்டு வழிந்த இரத்தத்தை தன் துண்டால் துடைத்துவிட்டு ஓடிச்சென்று வேலி ஓரத்தில் இருந்த ஏதோ பச்சிலையைக் கொண்டு வந்து கசக்கி சாற்றை காயம் பட்ட இடங்களில் தடவினான்.
அவனை விட அதிக எடையுள்ள மாறனைத் தன் தோளில் தூக்கிக் கொண்டு வந்து கிணற்றுப் பக்கம் மேடையில் படுக்க வைத்தான். மாறன் மெல்ல கண் விழித்தான்.
வலியால் ''ஐயோ ஆ...'' என்று முனகினான்.
''சாமி பச்சிலை சாறு போட்டிருக்கேன். சரியாப் போயிடும். மீனு வாயிக்குள்ளாற போயிருந்தா அது முள்ளு குடலைக் கிழிச்சி உசிரே போயிருக்குஞ் சாமி. நா வந்து மீன எடுத்து தூற போட்டுட்டேஞ் சாமி. இனிமே சீக்கிரம் புண்ணு ஆறிடும் ஒண்ணும் பயமில்லே''.
மாறன் எழுந்து உட்கார்ந்து கொண்டான். வாய் வலியால் ஒன்றம் பேச முடியவில்லை. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. ஆதிவாசிச் சிறுவனை அருகில் வருமாறு கையால் சைகை செய்தான். இவன் அருகில் சென்றதும் அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டான்.
                                                                                              கொ.மா. கோதண்டம் 

1 comment:

  1. Bringing beautiness of the forest in front our eyes is ko.ma. kothendam's area of strength. Once again he did it through his maran story.
    -prabakaran, writer.

    ReplyDelete