Monday 18 March 2013

மாதுளம்பழம்


"கௌம்பிட்டியாடா பாலு..." அவனது புத்தகப் பையையும் தூக்கிக் கொண்டு கேட்டாள்  பட்டு ரோஜா. பாலு சின்னக்கண்ணாடியில் முகம் பார்த்து தலையை வாரிக்கொண்டான்.
"எப்படிக்கா இருக்கு?"
"ம்... நல்லாயிருக்கு... கௌம்புடா... லேட்டாப் போனா  மொதலாளியம்மா  திட்டுவாங்க..."
இரண்டு பேரும்  வெளியில்  வந்தார்கள்.  தம்பியை  ஸ்கூலில்  விட்டுவிட்டு  அவள்  வேலைக்குப்  போக  வேண்டும். காலையிலேயே அம்மாவும் அப்பாவும் பக்கத்து ஊரிலிருந்து கட்டிட வேலைக்கு கிளம்பியாயிற்று.
பட்டுரோஜா  நாதாங்கியைப்  போட்டுப்  பூட்டினாள். சாவியை எரவாணத்தில் செருகிவிட்டு  தம்பியின்  கைப்பிடித்து அழைத்துப்  போனாள்.
எதிரே  சீருடை  அணிந்து  சிறுவர்,  சிறுமிகள் அவசர அவசரமாய் நடந்தும் ஆட்டோவிலுமாய் போய்க் கொண்டிருந்தார்கள்.
பட்டுரோஜா கூட  பானு  படித்த  நகராட்சிப் பள்ளியில் நாலாவதுவரை படித்தாள். அதற்குமேல் அப்பாவால் முடியவில்லை. அந்த  சமயம்தான் சாரத்திலிருந்து  தவறி விழுந்தான்  நாகப்பன் அவள் அப்பா... பட்டுரோஜாவால் தம்பியைப்  பார்த்துக் கொண்டும்  ஆஸ்பத்திரிக்குச்  சாப்பாடு எடுத்துக் கொண்டும்  அதேசமயம் பள்ளிக்கூடமும் போக முடியவில்லை. "பேங்க்காரரு  வீட்டில  வேலைக்கு ஆள் கேட்டாங்க -  ஐநூறு  குடுத்தா  இப்பக்கி ரொம்ப  உதவியா இருக்கும்.. என்னா  சொல்றே  பட்டுரோஜா?" - என்று  கேட்டாள்.
பட்டுரோஜா ஒத்துக்கொண்டாள்... இரண்டுமூன்று வருஷமாய் அது தொடர்கிறது.
இரண்டு பேரும்  சாலையோரம்  போய்க்  கொண்டிருந்தார்கள்.
திடீரென   சீருடை   அணிந்திருந்த   சிறுமியருத்தி பட்டுரோஜாவின் கையைப் பிடித்தாள்.
"பட்டு ரோஜா... நல்லாயிருக்கியா?.." 
"யாரு.."
"நாந்தான் சத்தியா..." 
"ஓ.. சத்தியா..." - பட்டுரோஜாவுக்குச்  சந்தோஷம்  தாள  முடியவில்லை.  கூடப் படித்தவள்.
"ஏன்  நீ  மேலே  படிக்கலியா..." - கேட்டாள் சத்தியா
"அதுவா... அது... வசதியில்லே.." - மழும்பினாள் பட்டுரோஜா
"சரி.. வரேன்.."  -  சத்தியா போய்விட்டாள். அவளையே  ஏக்கத்துடன் பார்த்தாள் பட்டுரோஜா.
"அக்கா.." -  பாலு அவளை இழுத்தான்.
"என்னடா.."
"நிறையப் பணம்  கிடைச்சா  நீ  படிப்பியா  அக்கா?" - பாலு கேட்டான்.  பட்டுரோஜாவின்  முகம்  மலர்ந்தது.
"அப்புறம்?..  நிறையப் பணம்  கிடைச்சா  அப்பா  வேற  வேலை  செய்யும்..
என்னைய ஸ்கூல் சேர்க்கும்..ஹ்ம்.. இதெல்லாம் கனவுலதான் நடக்கும்.. வாடா போலாம்.."
அப்போது  சாலையோரப்  புங்கை மரத்தடியில்  சாக்கு விரித்து மாதுளம்பழங்களைக்  கொட்டி விற்றுக்  கொண்டிருந்த வியாபாரியை  பார்த்தான் பாலு. அதன் மீது நான்காக வெட்டிய மாதுளம்பழம் வைக்கப்பட்டுருந்தது. செக்கச்செவேலென்று  மாதுளை முத்துகள்  பளபளத்துக்  கண்ணைப் பறித்தன.
"அக்கா.... அக்கா..... மாதுளம்பழத்துக்கு ஆசையா இருக்குக்கா"
ஆவலாய்க் கேட்டான் பாலு.   அங்கிருந்து  நகராமல்  நின்று கொண்டான்.         
         "டேய் ..... ஸ்கூலுக்குப் போகணும்.... வா.... "
"ஹீகும்.... பழம் வாங்கித் தா... செவப்பா  இனிப்பா  இருக்கும் !
"சாப்பிட்டா  வாயெல்லாம்  செவப்பா  ஆவும்.... அன்னிக்கு சஞ்சய்கூட சாப்பிட்டான்.. அக்கா எனக்கு வேணும்க்கா...." அடம்பிடித்தான் பாலு
பட்டுரோஜா வியாபாரியை நெருங்கி   "பழம் எவ்வளவுங்க ?"  என்று  கேட்டாள்.
"இருபது ரூபாய் குடும்மா"  என்றார்.
பட்டுரோஜா பாலுவிடம் குனிந்து மென்மையாகச் சொன்னாள்.
"பாலுக் கண்ணா... நீ ஸ்கூல் போயிட்டு வா... நானும் வேலைக்குப் போற  இடத்துல  பணம்  வாங்கிட்டு வரேன்... சாயந்திரம்  இதே  இடத்துல  வந்து  வாங்கிடுவோம்".... பாலு யோசித்தான்.... பணம்  இல்லாமல் வாங்க முடியாதென்று அவனுக்குத்  தெரியும் ! எப்படியும் அக்கா சாயந்திரம் வாங்கிடுவாள் என்று நம்பினான்.
"நாம வர்ரதுக்குள்ளே வித்து தீந்துடுச்சுன்னா ? ... என்று கேட்டான்.
            "சீச்சீ...... இருக்கும்...... "
அவனைப்  பள்ளியில்  விட்டுவிட்டு வேலை பார்க்கும் வீட்டுக்கு வந்தாள். பாட்டியம்மா மட்டும் சோபாவில் படுத்திருந்தாள்.
"எவ்வளவு நேரம் கழிச்சு வரே" .... என்றாள் கோபமாக.
"இல்லீங்கம்மா... நிமிஷத்துல வேலை முடிச்சுடுவேன்.... "
"அதுக்குன்னு  பாத்திரத்தை சோப்போட  வச்சுடாதே... சுத்தமா கழுவு..... "
அவரது மகனும் மருமகளும் வேலைக்குப் போயிருந்தார்கள்... பட்டுரோஜா கடகடவென்று பாத்திரங்களைச்  சுத்தமாக கழுவினாள். இங்கு  என்றில்லை  வீட்டிலும்  அவள்  பிறகு  சுத்தமாக  கழுவுவாள். ஆனால் பாட்டியம்மா நம்பமாட்டாள். 
பிறகு வீடுபெருக்கி துடைத்தாள். மிஷினிலிருந்து துணிகளை எடுத்து மாடியில் உலர்த்தினாள். பாட்டியம்மாவிடம்   எப்படிப்   பணம் கேட்பது?  என்று தயக்கமாக இருந்தது. 
"பட்டு ரோஜா.... நாளையிலிருந்து  லேட்டா   வரக்கூடாது... புரிஞ்சுதா ?"   எச்சரித்தாள்.... பாட்டி.
"சரிங்கம்மா.... " சொல்லிவிட்டு நின்றாள்.
"அப்புறமென்ன.... கிளம்பு... நான்  தூங்கணும்..."
"வந்து..... இருபது ரூபா .... கடனா...."  கேட்டே விட்டாள்.
"ஒங்கம்மா  முந்நூறு ரூபா  கடன்   வாங்கியிருக்கு..... போ..போ..."
அழுகை பொங்க வெளியே வந்தாள்.  ச்சே ஏழைகள்!  என்றால்  எல்லாருக்கும்  இளப்பம் தான்...  என்ன செய்வது ?
தம்பியின்  ஸ்கூலை  நோக்கி நடந்தாள். அவள்   மேட்டின்மீது  ஏறுகையில்  ஒரு  கிழவர்   தள்ளு  வண்டியில் காய்கறி  மூடைகளை ஏற்றி  மேட்டின்மீது   ஏற்றினார்.  அவரால் கொஞ்சமும்  தள்ள  முடியவில்லை. மேல்மூச்சு   கீழ்மூச்சு   வாங்க   முயற்சி   செய்து  கொண்டிருந்தார்.   பட்டுரோஜா   ஓடிப்போய்   வண்டியைத்   தள்ளினாள். இரண்டு  பேரும் சேர்ந்து கஷ்டப்பட்டு மேட்டின்மேல்   ஏற்றினார்கள்.
"போதும் பாப்பா..... இனிமே நானே தள்ளிக்கிறேன்" என்றார் கிழவர்
"இருக்கட்டும் தாத்தா.... வண்டி எங்கே போவணும் ? "
"வள்ளி விலாஸ் ஓட்டல்.... "
"வாங்க   தாத்தா..... எனக்கும் அந்த வழியாப் போவணும்....
ஓட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினாள்.
"பெரிய உதவி செஞ்சே பாப்பா..... ரொம்ப நன்றி.... இந்தா முப்பது ரூபா பணம்...."
  பட்டுரோஜா பதறிப் போனாள்.
"அய்யய்யோ.... எதுக்கு.... நானு   சும்மா தள்ளிக்கிட்டு வந்தேன்...."  
"இல்லடா ... என்  கூலி  எழுபது  ரூபா.... பாதிதூரம்   நீ  தானே தள்ளிக்கிட்டு வந்தே.... இதுதான் நியாயம்.... " பிடிவாதமாக சொன்னார்.
"அப்படின்னா இருபது ரூபா போதும் ... " இருபது ரூபாயை எடுத்துக்கொண்டு, கடவுளே உன் வழிகளை யார் அறிவார் ?
சந்தோசமாக பாலுவின் ஸ்கூல் எதிரே உள்ள மரத்தடியில் உட்கார்ந்து கொண்டாள். அப்படியே கண்ணை இழுத்து விட்டது.. நாலுமணிக்கு "கணகண" வென மணி அடித்ததும் எழுந்தாள். பாலு ஆசையாய் ஓடிவந்தான்.
‘‘அக்கா ’’
‘‘வாடா வீட்டுக்கு போகலாம் ’’ 
‘‘அக்கா... மாதுளம்பழம் .... ’’ நினைப்பாய் கேட்டான்
‘‘வாங்கலாம்.... வாங்கலாம்... ’’
இரண்டுபேரும் நடந்தார்கள். பாலுவிடம் கதைபேசிக் கொண்டே மாதுளம்பழ வியாபாரியிடம் வந்தாள்.. அவளுக்கு திக்கென்றது... சாக்கில் ஒரு பழம் கூட இல்லை.
  ‘‘ஏங்க பழம் இல்லியா ? ’’ அழுகையோடு கேட்டாள். பாலுவின் முகம் இருண்டுவிட்டது. 
‘‘எல்லாமும் வித்துப் போச்சு.... ரெண்டே ரெண்டு பழம் மீந்து கிடக்கு.... ’’ கூடையிலிருந்து ரெண்டு பழம் எடுத்துக்  கொடுத்தார்.   ஒன்று நசுங்கியிருந்து.... இன்னொன்று சுமாராக இருந்தது.
‘‘ இருபது  ரூபா வேணாம்..  பத்துரூபா  குடு... ’’ என்றார் வியாபாரி. பழங்களை வாங்கிக்  கொண்டு வீடு வந்தார்கள். 
ஒரு கிண்ணத்தை  எடுத்து  பழத்தை  எடுத்து  உடைத்து  உதிர்த்தாள்.  மாதுளம் பழத்தை  தம்பி ஆசையோடு சாப்பிடுவதைப்   பார்த்தாள்.  தனக்கு பணம்  தந்த  வண்டிக்கார  கிழவரை  நன்றியுடன்  நினைத்தாள்.


                                                                         சூ.ஜூலியட் மரியலில்லி

No comments:

Post a Comment